search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை பிறந்த தினம்"

    வந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகரின் 379-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. #MadrasDay #ChennaiDay
    பிழைப்புத் தேடி திக்குக்தெரியாமல் வந்து சேர்ந்தவர்களுக்கு வாழ்வு கொடுக்கிற வள்ளல் நகரம் சென்னை.

    தமிழகத்தின் இன்றைய மொத்த மக்கள்தொகையில் (சுமார் 7½ கோடி), ஒரு கோடி பேர் தலைநகர் சென்னையில் தான் காலம் தள்ளிக்கொண்டிருக்கின்றனர்.

    தூங்கா நகரம்போல் எப்போதும் பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய சென்னை, உயர்ந்த கட்டிடங்கள், மேம்பாலங்கள், மெட்ரோ ரெயில் சேவை என நவீன நகரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

    இந்தியாவில் 4 முக்கிய நகரங்களுள் ஒன்றாகவும், தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாகவும் உள்ள சென்னை மாநகருக்கு நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரிய பின்னணி இருக்கிறது.

    379 ஆண்டுகளுக்கு முன்பு (அதாவது 1639-ம் ஆண்டு) இதே நாளில் தான் (ஆகஸ்டு 22) சென்னை மாநகரம் உதயமாவதற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது.

    அதைச் செய்தவர் பிரான்சிஸ் டே என்ற ஆங்கிலேயர். கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜெண்டான இவர், இன்றைக்கு தலைமைச் செயலகம் இயங்கிக் கொண்டிருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை பகுதியை விலைக்கு வாங்கினார்.

    அன்றைய தினமே சென்னையின் உதய நாளாக கணக்கிடப்படுகிறது.

    அந்த இடத்தில்தான் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டினார்கள். அதன் பிறகு, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருப்புகள் உருவாகத் தொடங்கின. அவை மதராசப்பட்டணம் என்று அழைக்கப்பட்டது.

    மயிலாப்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், திருவான்மியூர், திருவொற்றியூர் என்று சிறு, சிறு கிராமங்களாக உதயமாகி, நகரமாக உருவெடுத்தபோது, வடக்கே இருந்த பகுதிகள் மதராசப்பட்டணம் என்றும், தெற்கே இருந்த பகுதிகள் சென்னப்பட்டணம் என்றும் இருவேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டன.

    பின்னர், காலப்போக்கில் இரண்டு பகுதிகளையும் ஒருங்கிணைத்து ‘மதராஸ்’ என்று ஆங்கிலேயர்கள் அழைக்கத் தொடங்கினர்.

    அந்த நேரத்தில், மதராஸ் நகரம் பல்வேறு சோதனைகளை சந்திக்க வேண்டியது இருந்தது.

    அதாவது, 1702-ம் ஆண்டு முகலாயர்களாலும், 1741-ம் ஆண்டு மராட்டியர்களாலும் தாக்குதலுக்கு உள்ளானது. 1746-ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் கைவசமானது. பின்னர், அவர்களிடம் இருந்து மீண்டும் ஆங்கிலேயர்கள் வசம் சென்றது. 1758-ம் ஆண்டு திரும்பவும் பிரெஞ்சுக்காரர்களின் கைகளுக்குப் போனது.

    இப்படியே கையில் சிக்கிய பந்தாக இங்கேயும், அங்கேயுமாக சிக்கித் தவித்தது. அடுத்த 2 மாதத்திற்குள் மீண்டும் ஆங்கிலேயர்கள் வசம் திரும்பியது. அதன் பிறகு, 1947-ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடையும் வரை ஆங்கிலேயர்கள் வசமே மதராஸ் நகரம் தொடர்ந்து இருந்தது.

    ஆங்கிலேயர்கள் சென்னையில் கால்பதித்ததற்கு முக்கிய காரணமாக அடையாறு, கூவம் ஆகிய 2 நதிகள் கூறப்படுகின்றன.

    இன்றைக்கு இந்த 2 நதிகளின் பெயரைக் கேட்டாலே மூக்கைப் பிடித்துக்கொள்ளும் நிலை இருந்தாலும், அன்றைக்கு தெளிவான நீரோட்டம் கொண்ட அழகிய நதிகளாகவே அவை இருந்துள்ளன.

    மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கிய இந்த 2 நதிகளிலும் சரக்குகளை எடுத்துச் செல்வதற்கான படகு போக்குவரத்தும் நடந்து வந்திருக்கிறது.

    வர்த்தகம் பெருகி மக்கள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியபோது, போக்குவரத்தை கட்டமைப்பதில் ஆங்கிலேயர்கள் முக்கிய கவனம் செலுத்தினர்.

    அந்த வகையில், 1856-ம் ஆண்டு முதல் ரெயில் நிலையமாக ராயபுரம் உதயமானது. அதன் பின்னர், பார்க் டவுன் (இன்றைய பூங்கா நகர்), தொடர்ந்து சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள் கட்டமைக்கப்பட்டன.



    நகரின் உட்பகுதியில், மாட்டு வண்டியும், குதிரை வண்டியும் மக்களின் போக்குவரத்துக்கு ஆதாரமாக இருந்த நிலையில், 1895-ம் ஆண்டு டிராம் வண்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்லும் இந்த வண்டிகள், தங்க சாலை (மின்ட்), கடற்கரை சாலை, மவுண்ட் ரோடு (அண்ணா சாலை), பாரிஸ் கார்னர் (பாரிமுனை) உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 எண்ணிக்கையில் இயக்கப்பட்டன. 50 ஆண்டுகளுக்கும் மேலாக டிராம் வண்டிகளின் சேவையையே சென்னை நகர மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

    சென்னையில் ஓடிய டிராம் வண்டி.

    இன்றைக்கு வேப்பேரியில் உள்ள பெரியார் திடல், தினத்தந்தி அலுவலகம் இருக்கும் இடத்தில்தான், அன்றைக்கு டிராம் வண்டிகளின் பணிமனை இயங்கியது.

    அந்தக்காலத்தில், இங்கிலாந்தில் இருந்து வியாபாரத்திற்காக கொண்டுவரப்படும் பொருட்கள், கடல் வழியாக கப்பல்கள் மூலமே எடுத்துவரப்பட்டுள்ளன. ஆனால், அந்த நாளில் இங்கே துறைமுகம் எதுவும் கிடையாது என்பதால், நடுக்கடலில் கப்பல்களை நிறுத்திவைத்துவிட்டு, இங்கிருந்து படகுகளில் சென்றே கொஞ்சம் கொஞ்சமாக பொருட்களை ஏற்றிவந்துள்ளனர்.

    ஆனால், காற்று அதிகமாக வீசும்போதோ அல்லது கடலில் ராட்சத அலைகள் எழும்போதோ படகுகள் நீரில் மூழ்கி விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

    இதனால், துறைமுகம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனைத் தொடர்ந்து, இப்போது துறைமுகம் இருக்கும் அதே இடத்தில் கிழக்கிந்திய கம்பெனியால் 1881-ம் ஆண்டு துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டு, கப்பல்கள் வரத் தொடங்கின.

    ஆனால், போக்குவரத்து தொடங்கிய 2 மாதத்தில் வீசிய புயலால், புதிய துறைமுகம் உருக்குலைந்து போனது.

    மனம் தளராமல் மீண்டும் வேறு வடிவில் துறைமுகம் கட்டும் பணி தொடங்கப்பட்டு, 1896-ம் ஆண்டு பணிகள் முடிவடைந்தன. அதன்பிறகு, சென்னை துறைமுகத்தில் இருந்து தொடர்ந்து கப்பல் போக்குவரத்து நடந்து வருகிறது.



    இப்படி, பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியிலேயே வளர்ந்த மெட்ராஸ் மாகாணம் சுதந்திரத்திற்குப் பிறகு சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டு வந்தது. 1968-ம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது, சென்னை மாநகரம் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. 1997-ம் ஆண்டு சென்னை என்று பெயர் மாற்றி அறிவிக்கப்பட்டது.

    இதுதான் சென்னை மாநகரின் நீண்ட நெடிய பாரம்பரிய வரலாறு.

    ஆனால், இந்த வரலாற்று நகரத்தின் இன்றைய நிலை என்ன?. வாழ்வு தந்த இடத்திற்கு நாம் கொடுத்த மரியாதை என்ன? என்பதை எண்ணிப்பார்த்தால் சோகமே மிஞ்சி நிற்கிறது.

    1930-ம் ஆண்டு வரை நீராடும் வகையில் இருந்த கூவம், அடையாறு நதிகள், கரையில் உருவான துணிகளுக்கு சாயம்பூசும் தொழிற்சாலைகளால் நாசம் அடைந்தன. இன்றைக்கு கழிவுநீர் கால்வாயாகவே மாறிவிட்டன.

    புராதன சின்னங்களின் அடையாளமாக நகரில் ஆங்காங்கே இருக்கும் பாரம்பரிய கட்டிடங்களும் போதிய பராமரிப்பு இன்றி வறுமை நிலையை வெளியே காட்டி நிற்கின்றன.

    பல வரலாற்று அடையாளங்களும் இடம்தெரியாமல் அழிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சோக வரலாற்றையும் கொண்ட சென்னை மாநகரம் தான், இன்றைக்கு 379-வது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

    தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, 2 கட்சிகள் தான் மாறி, மாறி ஆட்சி செய்து வந்திருக்கின்றன. ஒரு கட்சி, சிங்கார சென்னையாக மாற்றிக்காட்டுவதாக கூறியது. மற்றொரு கட்சி, எழில்மிகு சென்னையாக ஆக்குவதே லட்சியம் என்று சொன்னது.

    இதுவரை கூவம், அடையாறு நதிகளை சுத்தப்படுத்துவதற்கு எத்தனையோ கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த நிதி என்னவானது என்பது விடைதெரியாத மர்மமாக தொலைந்துபோய்விட்டது.

    இன்றைக்கு போக்குவரத்து நெரிசல், நிலத்தடி நீர்மட்டம் குறைவு, காற்று மாசுபாடு போன்ற புதிய பிரச்சினைகளையும் சென்னை மாநகரம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

    இனி வாழ தகுதியுள்ள நகரமாக சென்னை இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    எனவே, நமக்கு வாழ்வு அளிக்கும் சென்னை மாநகரை மீட்டெடுப்பதுதான் அதற்கு நாம் அளிக்கும் பிறந்தநாள் பரிசாக இருக்க முடியும். #MadrasDay #ChennaiDay

    ×